Sunday, February 26, 2006

எங்கெங்கிலும்...

எனக்கான உன் இசையில்
சோக ரசம்
ததும்பி வழியும்

உனக்காக
தாளம் போடும் பதங்கள்
அபிநயிக்கும் கரங்கள்
ஆத்ம ராகம் பாடும்
அமுத கானங்கள்

பாடலும் ஆடலுமாய்
முழு உலகுக்கான
நாட்டிய இசை
ஒத்திகையின்றி அரங்கேறும்

பார்வையாளர் கூட்டம்
ஆனந்தமாய்
கரகோஷிக்கும்

சுற்றிலும் நோக்க
எங்கெங்கிலும்
எங்கெங்கிலும்
நீ
நான்
நாமே

அன்பெனும் அமுதம்...

உறக்கமில்லா உறக்கத்தில்
கனவில்லா கனவில்
துன்பமில்லா நினைவில்
உனது ஆசைமுகம்

விழிகளின் ஊடுருவலில்
பொங்கிக் கசியும்
ஆனந்தக் கண்ணீர்

அளவின்றி
அடைக்கும் தாளின்றி
அன்பின் அமிர்தம்
பெருகும் வெள்ளமாய்

அகண்ட வெளியெங்கிலும்
நிறையும்
கோடி சூரிய பிரகாசமாய்

ஒரே அலை வரிசையில்...

நமக்கு பரிச்சயமான
நமக்கே நமக்கான
ஒத்திசைவு நம்மிடையே
ஒன்றேனும் இருக்கிறதா
யோசித்து சொல்

ஆமாம் இருக்கிறது
ஒன்றே ஒன்று

ஆர்வம் விழிகளில் தெறிக்க
சொல் என்றாய்

நமக்கே நமக்கான
நம்மிடையேயான ஒத்திசைவு

மனம் நிறைந்த அன்பு
அதுவும் ஒரே அலைவரிசையில்