Wednesday, August 29, 2007

வெம்மை சொல்லும் உண்மை...

குளிர் தணிக்க சேர்த்தணைப்பாய்
சேர்த்தணைக்கக் கிடைக்கும் வெம்மை
வெம்மை சொல்லும் தேடிடும் உண்மை
உண்மை கண்டு நெகிழும் நெஞ்சு
நெஞ்சு உணரும் காதலில் நிறையும்

நிறையும் இதழைத் தீண்டும் அழுத்தம்
அழுத்தம் அழுந்த இசைக்கும் இசை
இசையோ இனிக்கும் முத்த சுவை
சுவையோ ஈர்த்து வேண்டும் குளிரை
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்

சாகரப் பறவையாய்...

திங்கள் திங்கள் திங்களென்று
போயின பல திங்கள்கள்
வரவில்லையா இன்னும்
நமக்கான திங்கள்
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
நம் சந்திப்பின்
ஒரு திங்களுக்காய்
சாதகம் செய்யும்
சாகரப் பறவையாய்

Thursday, August 23, 2007

விதியின் கைகளின் வழியே...

ஒரே மேடை
ஒளியாகவும் இருளாகவும்

உன்னை என்னில் விதைத்து
என்னை உன்னில் விலக்கி வைத்து
என்னில் உன்னை பிணைத்து
உன்னில் என்னை பிணங்கச் செய்து

ஆட்டுவிக்கும்
விதியின் கைகளின் வழியே
வழியும் நூலில்
கட்டுண்டிருக்கிறோம்
விளையாட்டு பொம்மைகளாய்

காதலித்துப் பார்......

காதலித்துப் பார்
கணங்கள் ருசிக்கும்
காயங்கள் ஆறும்
வேதனை மறையும்
வேட்கை பிறக்கும் வாழ்ந்திட
வசந்தம் நிறையும்
வாசல் திறக்கும

உலகே வியக்கும்
உயர்நிலையடைவாய்
வாழ்வே இனிக்கும

காதலை அறிய

காதலை உணர

காதலித்துப் பார்v

Wednesday, August 22, 2007

காதல்...

காதலுக்கான
நிரூபணம் தான் என்ன
காதலிப்பதைத் தவிர

காதல்
என்ன கேட்கும்
காதலைத் தவிர

காதலின்
எதிர்பார்ப்புதான் என்ன
காதலைத் தவிர

கடவுள் என்றால் என்ன
இனிப்பு என்றால் என்ன
காதல் என்பது என்ன
வார்த்தையில் வடிக்க இயலாதே

காதல்
என்பது என்ன
காதல்தான்

காதலித்துப் பார்
காதலிப்பவரே உணர இயலும்

அன்பும் கூட...

நேசிக்கக் கிடைக்காத
நீண்ட பொழுதுகள்
நேசிக்கும் உத்வேகம் வளர்க்கும்
வளரும் பிறையாய்

பீறிட்டெழும் உணர்வுக்கான
வடிகாலில்லாத பொழுதில்
வெடித்தெழும் கோபரூபம்கொண்டு
அன்பும்கூட

நேசம் மறுக்கப்பட்டபோதும்
நேசம் பொங்கித் ததும்பும்
தீராத தாபத்துடன்

வார்த்தையில்லா கணங்கள்
வாஞ்சையாய் வெளிப்பட்டாலும்
வேறாய் புரிந்து கொள்ளப்படும்
விதையொன்றிட
சுரையொன்று முளைக்காதென
அறியும் திறனிருந்தாலும்

உறங்கா இரவுகள்
உயிர்ப்பித்த உணர்வுகள்
உன்னதமானவை

மறுதலிக்கப்பட்ட காதல்
என் செய்யும்
காதலில் கசிந்துருகுவதைத் தவிர...

Thursday, August 16, 2007

சித்தம் சிதறடித்தாய்...

சில்லாய் உடைந்த மனதை
சீர் செய்ய இயலவில்லை

சிரமமில்லாத பணி உனக்கு
சத்தமின்றி விட்டுச் செல்தல்
மொத்தமாய் வீழ்ந்து கிடக்க
காலங்கள் கடந்தும்
சுத்தமாய் கிடையாது
தேவைப்படும் தரிசனம்

காலம் அனுமதிக்கும் காலம்வரை
காற்றில் அனுப்புகிறேன்
பெற்றுக் கொள் உனக்கான பரிசினை

சித்தத்தை சிதறடித்த
உனக்கு
முத்தத்தை விட
சிறந்த பரிசெது

காதலை வெளிப்படுத்தும் கணம்...

சட்டென அனுமதியின்றி
வெளிப்படும் உனது காதல்
வெள்ளைத்தாளில்
பட்டவுடன் பளிச்சிடும்
சிறு வண்ணத்தீற்றலாய்
மனதில் கீறிவிடுகிறது
அழியா சித்திரத்தை

காதலை வெளிப்படுத்தும்
கணந்தோறும்
கனன்றெழும் அன்பு
தகிக்கச்செய்கிறது
தேகம் முழுமையும்
தென்றலின் தேவையை
திகட்டத் திகட்ட வேண்டுவதாய்

அறிந்து அல்லது அறியாது
வெளிப்படும் ஒற்றை வார்த்தை
காதலின் ஒளியைத் தூண்டி
அணையாது காக்கிறது
அணைப்பின் தீவிரம் கோரியபடி
காதல் வெளிப்படும்
அடுத்த கணத்தை வேண்டியபடி...

உனக்கே உனக்காய்...

உனக்கான மகிழ்வை
உனக்கே உனக்காய்

உளப்பூர்வமாய் அளித்திடும்
உணர்வு ஊற்றெடுக்கும்
உறங்க எத்தனிக்கையில்

உன் உறக்கக்குரலில்
பொங்கி வழியும்
பிரியத்தின் மலர்களை
வாடாமல் பாதுகாத்துவிடும் போதையில்
நிகழ்வது என்ன என்ன என்றறியா
நிலையிலும்

உறங்கித் தொலைத்துவிடும்
உத்வேகம் மலரும்
உனக்கான களைப்பைப் போக்கிட
உனக்கான மருந்தாய் மாறிவிட

யாரும் காணா நிலையிலும்
எவருமறியா ஏதோ ஓரிடத்திலும்
மலர்கள்
மலர்ந்து கொண்டுதானே இருக்கிறது

உருகும் உள்ளம்
உணராநிலையில்
உறக்கம் தொலைத்து
எங்கோ இருப்பாய்

உனக்கே உனக்காய்
மகிழ்வளிக்க வேண்டி
உனக்கான உறக்கம் தாங்கி
உறங்கித் தீர்க்க வேண்டும்

உறக்கம் தொலைத்த பொழுதில்...

உறக்கம் தொலைத்த பொழுதில்
ஓயாதெழும் உன் நினைவு
உன்மத்தமளித்தபடி

உன்மத்தம் கொண்ட மனம்
உனைவிடாது பற்றிக் கொள்ளும்
உடும்புப் பிடியாய்

பிடியை நழுவவிடாது
பிடிவாதமாய்
இறுகத்தீண்டும்
இணைந்தே இருக்க விரும்பும்
பித்துப் பிடித்த உணர்வில்

உணர்வின் கொந்தளிப்பில்
உனைக்காத்திடும் ஆவேசமும்
உறக்கமாய் உனைத்தீண்டும் பரிதவிப்பும் சேர
உணர்வாயோ இதே உணர்வை

உணர்ந்த உண்மையால்
உறங்கச் செய்கிறாய்
உன் நினைவால்
உயிர்ப்பிக்கிறாய்
உடன் சாமரம் வீசி

Wednesday, August 15, 2007

அன்பில் கரைதல்...

அனல் பறக்கும் வேளையிலும்
ஆகக் குளிர்ந்த பொழுதுகளிலும்

எங்கும் உனைக்காண நினைக்கையில்
எதிலும் உனை உணரத்தவிக்கையில்
எதையும் உன்னுடன் பகிரத்துடிக்கையில்

என்றோ போடப்பட்ட
எல்லா கட்டுகளையும் கடந்து
அனைத்து தளைகளையும் உடைத்துக் கொண்டு

அன்பில் கரைதல்
நிகழ்ந்துவிடுகிறது தானாகவே