Thursday, March 29, 2007

அன்பை மீட்பாயா

எங்கே சென்றாலும்
என்னுடனே வருகின்றாய்
உன் பெயரை உச்சரிக்க
மாயமாய் மறைகின்றாய்

என்ன ஜாலமிது
என்ன வேதனை இது
அன்பின் பிடிக்குள்ளே
ஆவேசம் சேர்ந்திடுமோ

ஆவேசம் சேர்ந்துவிட்டால்
அணைத்துக் காப்பாயா
அணைத்து எடுக்கையிலே
அன்பைதான் மீட்பாயா

முத்தம் நீ கொடுக்க
முடியாமல் நான் தவிக்க
மார்போடு சேர்த்துக் கொண்டாய்
முழுமேனியும் நடுங்குதடா

வெட்கம் துடைத்திடவே
தாளாது நான் துடிக்க
மோகப் போர்வை சேர்த்து
மேனியாலே மூடிடுவாய்

Wednesday, March 28, 2007

உச்சரிப்பது உன் பெயரே...

நெஞ்சுன்னைத் தேடுகையில்
நினைவழிந்து கிடக்கையில்
நித்தம் முத்தம் பதிக்கையில்
உடனிருந்தும் உச்சரித்தும்
காப்பதுன் பெயரே

விதி இதுவோ
விதி செய்த சதி இதுவோ
மதி இழந்து கிடக்கையில்
மோகமயக்கத்தில் உழல்கையில்
மனம் அமைதியில் ஆழ்கையில்
உச்சரிப்பது உன் பெயரே

மாலை மருள்கையில் காக்குமோ
இருள் சூழ்கையில் காக்குமோ
மரணவாசல் வரை வந்து காக்குமோ
மனமும் உச்சரிக்கும் உன் பெயரே

Friday, March 23, 2007

ஒரு நாள் சமன்படும்

உள்ளத்தில் பொங்கி வழியும்
உணர்வுகளுக்கு
எப்படி அணைக்கட்ட இயலும்

தடுக்கப்படும்போது
கட்டுகளை மீறி
காட்டாறாய் பெருகி ஓடும்
எங்கோ எவ்விதமோ
எப்படியோ
ஓர் நாள் சமன்படும்

Thursday, March 22, 2007

பிரிவின் வலி...

நாணயத்தின்
இரு பக்கங்கள்
சந்திப்பும் பிரிவும்

சந்திப்பின் மகிழ்ச்சி
விடைபெறுதலில் இருப்பதில்லை

விடைபெறுவதன் வலியினை
பொறுத்தே ஆகவேண்டும்
அடுத்த சந்திப்பின் மகிழ்வை
அவசியம்
எடுத்துவருமென்ற காத்திருப்பில்

காத்திருத்தல்
அளிக்கலாம் வலியினை

அத்தனை வலியும்
தூய்மை செய்யும் மனதை
அள்ளி அள்ளி சுரந்தளிக்கும்
ஊற்றுக்கண் பெருக்கும்
நினைவின் சுகத்தை

வலியையும் சுகமாக்கி
விடைபெற்றுச்சென்றதெங்கே

Wednesday, March 21, 2007

நினைவின் தீண்டல்...

நிலைகுலையச் செய்யும்
நினைவின் தீண்டல்
ஆழிப்பேரலையின் ஆர்ப்பரிப்பாய்

நினைவால்
நிதம் தீண்டிச் செல்கிறாய்
ஆழ்கடலின் அமைதியாய்

உன்னை நினைக்கவில்லை...

உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைக்கவில்லை

உரக்கச் சொல்லிக் கொள்கிறாய்
உனக்குள்

ஒப்புக் கொள்கிறேன்
நம்புகிறேன்
நலமாயிரு

Friday, March 09, 2007

வெல்வது எங்ஙனம்...

மனம் ததும்ப
தழுதழுக்கும் உணர்வுகளை
வெல்வது எங்ஙனம்

காரணத்தோடோ
காரணமின்றியோ
விளைவதல்லஅன்புப்பயிர்

நீரூற்றாமலே வளரும் அன்பை
நிறுத்துவது எப்படி
அன்பின் அலையால்
அடிக்கப்பட்டு
இழுத்துச் செல்லப்படும் உயிர்
எங்கே கரை சேரும்

எதிர்பாராமல் கிடைத்த அன்பின்
பேரொளியில் பேரானாந்தத்தில்
திளைக்கிறேன்

எதிர்பார்த்தே கிடைத்த அன்பின்
பேரொலியில்
இசைந்து கிடக்கிறேன்

அன்பின் வசமான மனம்
அனைத்தையும் மறந்து
அன்பில் திளைத்துக் கிடக்க
அன்பைப் பற்றியே நகர்கிறது
அமைதியாக வாழ்க்கைப் பயணம்
பற்றுக்கோலாய்

பனிமலையிடையே
பனிமழை பொழிய
குளிரில் நனைந்து
குளிரைப் போக்கிட
வெப்பம் உணர்ந்து

இணைந்த கரங்களின்
இசைந்த இசைவில்
இன்பம் நுகர்ந்து
உயிரில் கலந்து
உறையும் நாள்
உலகம் வியக்கும்
உண்மை அன்பை
உணர்ந்திட வந்திடுமோ
அத்திருநாள்
இனிய பொன்னாள்
மறக்க முடியுமா
கனவு நனவாவதை
நனவே கனவாகக் காட்டியதா

காலம்
இணைத்த இருமனங்கள்
எந்த முடிச்சுமுடிச்சிட்டது
நீங்காது இணைந்திட