Sunday, July 29, 2007

இன்று பௌர்ணமிதான்...

தினமும் நடக்கும்
ஒருவழிப் பாதைதான்

முகிலின் மறைவில் நிலவோ
தெரிந்தும் தெரியாமலும்

இருபக்க மரங்கள்
இசைந்து வீசின
தென்றல் சாமரம்
மலர்களை மகிழ்வுடன்
மலரவைத்தபடி

வேப்பமர நறுமணம் பரவும்
வேறுமணங்களை விஞ்சியபடி

நடையின் நடுவே
நடையில்
இணைந்து செல்லும்
நினைவு
கனவினை மிஞ்சி

மலர்ந்த மென்னகையுடன்
காதலை வெளிப்படுத்தும்
குரலின் கனிவு
மறைக்க நினைத்த அன்பை
மயக்கத்தில் வெளிப்படுத்தியபடி

மேகம் கடந்து
உயரே எழும்பிய வெண்ணிலா
வானம் முழுக்க
வெண்ணொளியினை பரப்பி
வாரி அணைக்கிறது உலகை

இன்று பௌர்ணமிதான்.

Thursday, July 26, 2007

உனக்கான கீதம்.....

தென்றலும் திங்களும் உறங்கும்
மலரும் பறவையும் உறங்கும்
வண்டுகளும் விலங்கும் உறங்கும்
உயிர்கள் மொத்தமும் உறங்கும் உலகு

உறங்கா உள்ளம் இசைக்கும்
தனியே
தன்னிச்சையாய்
கீதம்
உனக்கான கீதம்

கீதம் இசைந்து மிதக்கும்
உணர்வில்
உயிரில்
உலகில்
வெளியில்

மெய்யுருக
வார்த்தைகள் கடந்து
உனைத்தேடி
உனைத் தீண்ட
அசையும் கீதம்

உயிரில் இசைத்து
உன்னை இலக்காக்கி
உலகுக்களித்தேன்

களித்த உலகம்
கரகோஷமிட்டது
உன்னத கீதமென

அடம் பிடிக்கும் குழந்தை நீ...

கண்ணனின் லீலைகளாய்
மிஞ்சும் குழந்தையின் அடம்

கெஞ்சும் மிரட்டல்
கொஞ்சும் பாவனையில்

வஞ்சம் நிறையுலகில்
தஞ்சமடைந்தேன் உன்னை
பஞ்சாய் பற்றிக்கொண்டாய்

உன்னுயர் குணங்கள்
உன் பலவீனங்கள்
உன் சோதனைகள்
அனைத்தையும் கடந்து

நான் நானாக இருப்பேனென
அடம் பிடிக்கும் குழந்தையுனை
ஒதுங்கிச் சென்றாலும்
இழுத்து இறுக
அரவணைத்துக் கொண்டேன்
அன்பின் மிகுதியில்

ஆண்டுகள்
ஜென்மாந்தர தேடலுக்குப் பின்
அடங்கி என்னுள்
அமைதியின் சொரூபமானாய்

உன் பிடிவாதம்..

பிடிக்காது சொன்னபடி ஆடினால்
ஆனால்
சொன்னதைச் செய்ய வேண்டும்
சொன்னபடியே

ஆகாது சொல்லாததைச் செய்தால்
ஆனால்
எதிர்பாராததைச் செய்யவேண்டும்
சொல்லாவிட்டாலும்

என்ன செய்தும்
தீராத உன் தாகம்
நம்பிக்கையின்மையாய் அளிக்கும் கோபம்
ஆறாத ரணங்களை உணர்த்தும்
மாறாத கேள்விகள் எழுப்பும்

விளையாட்டாய் ஒதுக்குவேன்
உன் கோபத்தை
உன் காதலின் தீவிரம் வியந்து
உலகின் உயர்தர காதலன் நீயென்றுணர்ந்து

உன் பிடிவாதத் தேடலுக்கான
மருந்தும் விடையும்
உலகெங்கிலும் மூவுலகிலும் ஏழுலகிலும்
எங்கும் கிடையாது
எனை விடுத்து

உன் காதலறிந்த கணம்...

மறந்தாகிவிட்டதென்று
வார்த்தை ஜாலத்தில்
மறுபடி மறுபடி
மறந்ததாய் காட்டிக் கொள்வாய்

மறக்கவியலாதென அறிந்தாலும்
தவிப்பில் அமிழ்ந்து
தேடலில் தொலைந்து
பரிதவிக்கும் கணத்தில்
மீண்டும் காரணம் காரியம்
சொல்வாய்
காத்திருக்க வைத்ததற்காய்

புதிது புதிதாய்
முற்றிலும் புதிதாய்
ஒவ்வொரு முறையும்
உன் காதலை அறிந்தகணமும்
புதுமலர் பூக்கும் புதிதாய் எனக்குள்
புத்தம் புதிதாய்
எனைப் பார்த்ததும்
மலரும் உன் மதிமுகம் போல்

Wednesday, July 25, 2007

எங்கு சென்றனையோ...

நிலவு சுடுகிறது
நீள் பாலையாய்

தீண்டும் தென்றல் தீய்க்கிறது
தண்மையின்றி கனலாய்

நீ இல்லா இரவும் நீள்கிறது
வாழ்வின்
காண இயலா
கடைசிப் பயணமாய்

உனக்கான கீதமிசைக்கிறேன்
ஒற்றைக் குயிலாய்

Friday, July 20, 2007

வென்றது நீ...

தவிப்பின் வேட்கை
தீண்டிச் செல்கிறது

வாழ்வேனோ
அன்றி
வீழ்வேனோ

கற்பனை வாழ்வின் நிதர்சனம்
கற்றுத் தந்தாய்
உன் வாழ்வின் இனிமைக்காய்
இல்லாத கணத்தை
தாண்டிச் செல்ல கற்கிறேன்
உன் அன்புத் தீண்டலின்
இனிமை தொட்டு

முடியாத கணங்கள்...

விலக்குவது எப்படி
இல்லாத தடையை

இடையே இத்திரை
வந்தது எப்போது

கைவரவில்லை
திரையை அறுத்தெறியும் வித்தை

தெரிந்த அனைத்தும்
பூஜ்யமாய்
கொண்டு வந்து சேர்க்கும்
முடியாத கணங்களை

உன்னுடனான பொழுது...

நேரம் கடந்து கொண்டுதானிருக்கிறது
தன்னிச்சைப்படி
சேர்ந்திருந்த காலங்களின்
நினைவினை வாரி இறைத்தபடி

எதனாலும் தடுக்க இயலவில்லை
எப்படியோ நிகழ்ந்துவிட்ட
கடைசிக் காட்சியின் வெம்மையை

அள்ளி அள்ளி எடுத்து தீர்த்தாலும்
குறையவேயில்லை
நினைவின் நீட்சி
அள்ளக் குறையாது நீ அளித்த
உன் அன்பைப்போல்

Thursday, July 19, 2007

தேவையின் தேடல்...

என் அண்மை தேவை உனக்கு
காலம் தூக்கி எறிந்த மாற்றம்

வாழும் வாழ்க்கை
உனதா எனதா

உன் அண்மைக்கு காத்திருப்பு
உணர்வை அழிக்கும் பகலிலும்
உயிரோடெரிக்கும் இரவிலும்
காலம் அனுமதிக்குமா

நீறு பூத்த நெருப்பாய்
உன் நினைவில் தவிக்க
நீரூற்றி அணைப்பதாய்
அணைக்கப் பார்க்கிறாய்
அணையா நெருப்பளித்து

மேலும் கனன்றெழும் அன்பை
மூடி மறைத்து ஒளித்து வைத்த
அன்பாலே அணைத்து விடு

Tuesday, July 17, 2007

தெரிந்தும் தெரியாத கேள்விகள்...

என்றோ நிகழ்ந்த
ஜன்மாந்திர சம்பந்தம் நிறைந்த
சந்திப்பின் நீட்சி
என்று வரை தொடரும்

அதே விருப்புடனா
அதே மகிழ்வுடனா
அதே உணர்வுகளுடனா
அதே பிரியங்களுடனா
அதே சந்திப்பை எதிர்பார்க்கும் ஆவலுடனா

காலம் புரட்டிப்போடாது சந்திப்பு
என்றோ நிகழுமெனில்
இதே கேள்விகள் உண்டோ உன்னிடமும்

என்று நிகழும் அடுத்த சந்திப்பு

Wednesday, July 11, 2007

தேடும் கணங்கள்...

உலகெங்கிலும்
வெளியிலும் தேடுகிறேன்
என்னுள் இருக்கும்
உன்னை

தேடலின் கணங்கள்
அதி அற்புதமானவை
சில சமயங்களில்
இனிமையானவை
கண்ணில் நீர் தருபவை
மலர் அள்ளித்தருபவை
தீயை வளர்ப்பவை
எதிரெதிரான உணர்வினை
மாற்றி மாற்றித் தருபவை

இன்னும் இன்னும்
உயிர்ப்புடன் வாழ்வின்
இரகசியத்தை
அறியச் செய்பவை

உன்னை வாழ்த்தும்
ஒவ்வொரு கணமும்
தேடலின் சுரங்கத்துள்
தூக்கி எறிந்துவிடுகிறது
நினைவில் மூழ்கடித்து...

Saturday, July 07, 2007

தொடரும் பயணத்தில்...

பாலையின் கடுமையில்
பயணம்

எங்கோ கேட்ட பறவையின் இசை
தோளில் அமர்ந்து
இசையின் இனிமை
தணித்த வெக்கை
வேண்டியது பறவையின் துணணயை

சோலை அருகில் வரும்
சோர்ந்த உடலும் மனமும்
அமைதி பெறுமென

பறவைக்கு பந்தமில்லை
தோளே கதியுமல்ல
தொடர்ந்து சோர்வு போக்குவது பணியுமல்ல

பயணத்தில் பறப்பது எளிது
சுமப்பது கடினம்

வழிநடக்கும் பாதை பாலைதான்
பயணம் தொடரத்தான் வேண்டும்
கீதமிசைக்கும் நொடி தவறாது
பாடம் கற்றுத்தந்த பறவை

கீதத்தின் இனிமையென்றும்

மனதில் அழியாது நின்றாலும்

வெறுமை தொடரும்

தொடரும் பயணத்தில்...


Friday, July 06, 2007

அன்பும் விஷமாகுமோ...

அளவுக்கு மிஞ்சினால்
அன்பும் விஷமாகுமோ

அதீத அன்புமயமானதால்
நஞ்சானேனோ
நானும் உனக்கு

உன் உலகு விடுத்து
விலகுகிறேன் விரும்பாமலே
உன்னைக் காத்திடவே

வேண்டியதைத் தந்த நீ...

உலகைத் துறந்த
உயிர்ப்பொழுதில்
உணர்வு ததும்ப நெருங்கினாய்

மரக்கட்டையை
மலரச் செய்தாய்
மனமறிந்து நடந்தாய்

செய்வாயா எனும்
ஒற்றைச் சொல்லை
ஒரு நாள் உச்சரிக்க

என்ன கேட்பாயெனும்
கேள்வியே இன்றி
ஒத்துக்கொண்ட மனம்
அறியச் செய்தது
அன்பை மனதை
நிழலாய் நின்று
நிஜம் உணர்த்தினாய்

வேண்டியதைத் தந்தாய்
வேண்டாததையும்
வேண்டியதாய் தந்தாய்

வேறு சிந்தையில்லை
உன்னைத் தவிர
வேறு சிந்தையில்லை

நீயன்றி வேறு அன்பில்லை
தினமும் உன் அன்பில்
நனைந்து வாழ்கிறேன்
உன்னை மட்டும் வேண்டி
நீயோ விதியாய் சிரிக்கிறாய்
தீண்ட இயலா தொலைவில் நின்று

Monday, July 02, 2007

எங்கெங்கிலும் நீ ...

உலகையே சுற்றிவருகிறாய்
எனை அழைத்துக் கொண்டு

விநாடியும் உனை
விலக விடாது
விரும்பிப் பற்றிக்கொண்டேன்
உயிரைக் காக்கும் ஆவலாய்

விடியல் சொல்கிறது
விழித்தபடியான கனவென்று
வீழச் செய்தது உற்சாகம் வடிய

உலகைத் துறந்த பின்னும்
உன்னைத் துறக்க இயலவில்லை

உயிரினும் இனியதாய்
இனித்துக் கிடக்கிறது
உன் நினைவு

கண்ணனின் மீராவாய்
உன் பெயரை
உச்சரித்து உச்சரித்து
சிவபாராயணம் நடக்க
செவி மூடிய நீயோ
அவளின் கைகளில்

உனைக் காக்கும்
அவளை வாழ்த்துகிறேன்
நான் தரா
நிம்மதியினைத் தருவாய் நீ
நித்திராதேவியென

என்ன செய்தாயடா
என்ன செய்வேனடா