Wednesday, February 28, 2007

தீண்டுகிறேன்...

மொழிக்கான வளமில்லை
மீறும்
அன்பினைப் பாட

விழிமீறும் அன்பை
வடிக்க இயலவில்லை
மொழியால்

தொடர்ந்து தூரமாய்
விழி மீறுகிறாய்

நினைவால் நிதம்
தீண்டுகிறேன்
நெடுந்தூரம் கடந்தும்

நம் வசம்...

சந்திப்பும் பிரிவும்
நம்வசம் இல்லை
பிறப்பும் இறப்பும் போல்

சொல்லிச் செல்வதோ
சொல்லாமல் செல்வதோ
நம்வசம் இல்லை
சந்திப்பும் பிரிவும் போல்

நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும்
நம் வசம்

சொந்தம்...

எந்த ஜென்ம சொந்தம்
எழுதவியலா பந்தம்

பறித்துச் சென்றாயா கண்ணா
பறிகொடுத்தேனா உளமலரை

விட்டுச் சென்றாயா மனதை
விடைகொடுக்க மறுத்தேனா

தொலைந்ததும் பெற்றதும்
மாயையா மகிழ்வா

எக்கணம் நிகழும் சந்திப்பு
எழுதிச்செல்லும் விதியின் வசம்

Tuesday, February 27, 2007

கனவா நனவா...

அண்மையில்
அமைதியாய் நீ
விழிகளை ஊடுருவும் பார்வை
விழுங்கிவிடுவதாய்

உடல் அதிர அதிர
அதிர்ந்து திரும்ப
பின்னிருந்து ஸ்பரிசம்
ஆலிங்கனம்

விழிக்க விழிக்க
விழிக்கிறேன்
கலைந்து சென்றாய்
கலைந்திடும் கனவாய்

விழிகளால் ஸ்பரிசித்து
நகைக்கிறாய்
நனவல்ல
கனவு

Monday, February 26, 2007

மௌனத்தின் சுவை...

மௌனத்தின் மோன நிலையில்
மயங்கிக் கிடந்த பொழுது

மௌனம் கலைத்து
மனம் திறக்கச் செய்தாய்

மௌனம் கலைக்க
சற்றே பிரயத்தனிக்க

மௌனத்தின் சுவை அறிய
மௌனம் பழகுகிறாய்

மௌனத்தின் பேரொலியில்
மனம் அதிர
மதி மயங்கி
மூழ்கிக் கிடக்கிறேன்
மகுடிக்கு இசைவதாய்

Sunday, February 25, 2007

உன்னை இங்கே...

வருவாய் எனும்
வாழ்வின் காத்திருப்பில்
விழி சோர
காத்திருக்கிறேன்

மதியோ விதியோ
என்னை கரைசேர்க்கட்டும்
உன்னை இங்கே
கொண்டுவந்து சேர்க்கட்டும்

புது அவதாரம்...

நெற்றியின் சிறு குழிவில்
சற்றே நீள இடப்பட்ட
திருநீற்றின் சாயல்
முக்கண்ணனை நினைவூட்டும்

இடதுபுறம் சற்றே
இறங்கியிருக்கும்
வலதுபுற மீசையை விட

மூக்கின் நுனி
கன்னக் கதுப்புகள்
மினுங்க
விழிகள் ஒளிரும்
அன்பின் தீட்சண்யத்தில்
அறிவுச் சுடரையும் காட்டும்

கவனம் இதனினும்
அதிகமாய் தேவையோ
அறிவாயா கண்ணா
புது அவதாரம் எடுத்துள்ளாய்

உன்னது...

என் மொழி உன்னது
என் இசை உன்னது

நீ இல்லாது
மொழியும் இசையும் நில்லாது

உன் பூஜைக்கான பிரசாதப்பூக்கள்
உன்னை நாடி மலரும்
உனையே சேரும் எங்கிருந்தாலும்
மானசீகமாய்
மறைவதற்கு முன்பேனும்
மலர் உதிருமுன்பேனும்
மது சுவை அழியுமுன்பேனும்

மலர்ந்த மதுமலர்
சமர்ப்பணம் உன் தோளுக்கே

நீ எங்கே...

நீ அளித்த அன்பு
வழிநடத்திய பாதை

நீங்கமாட்டேன்
நின்னை உயிருள்ளளவும்
நீங்கமாட்டேன்

நீ எங்கிருந்தாலும்
நினைவால் தொடர்கிறேன்

நீ என்னை
நினைவால் தொடர்வதை
உணர்கிறேன்

நீ எங்கே
இமைசோரத் தேடித்தேடி
களைத்தன விழிகள்
இசைதேடித் தேடி
சோர்ந்தன செவிகள்
நினைவு இழக்கவில்லை
நின்மீதான நம்பிக்கையினை

நீங்கமாட்டேன் நின்னை
நினைவிருக்கும் வரை

Saturday, February 24, 2007

நீங்கமாட்டேன்...

காணுமிடம் யாவும்
காணாவிடங்களிலும்
நிறைந்துள்ளாய் கண்ணா

நனவிலும் நீ
கனவிலும் நீயென
நீக்கமற நிறைந்ததேன் கண்ணா

மறைந்தும் தோன்றியும்
நீ காட்டும் ஜாலங்கள்
நெஞ்சில் புது கோலங்கள் தீட்டும்
வாழ்வதற்கான வேட்கையினை
வாரி வாரி வழங்கியபடி

நீள் வானமெங்கும்
நமதான களியாட்டம்
பொங்கிப் பெருகித் ததும்பும்
உலகையே வாழ்விக்க

வா வந்து கானமிசைத்திடு
வசந்தம் வசந்தமிழந்து
சோர்ந்து காத்திருக்கிறது
வசந்தம் சேர்ப்போம் நாம்
வசந்தத்துக்கு

இனியது...

காத்திருப்பு அளிப்பது
வலியா மகிழ்வா
வரமா சாபமா

இதுவோ அதுவோ
எதுவோ

காத்திருப்பு அளிக்கும்
வாழ்வதற்கான உயிர்ப்பை

இனியது காத்திருப்பு
அதனினும் இனியது
அன்பிற்கான காத்திருப்பு
உயிர்த்திருப்பதை விட
மரணத்திற்கான காத்திருப்பு
இனியது இனியது
அனைத்தினும் இனியது

Friday, February 23, 2007

ஒற்றைச் சாளரமும் மூடிக் கொண்ட பொழுது...

எல்லா கதவுகளும்
அடைக்கப்பட்டு மூச்சுமுட்ட
அடைபட்டுக் கிடந்த பொழுது

திறந்த ஒற்றைச் சாளரமும்
திறந்தது மூடிக்கொள்ளவே என
சாத்திக்கொண்ட பொழுது

சாளரம் வழி கண்ட
புது உலகின்
காட்சியும் கானமும்
நினைந்து நினைந்து
கடைசி மூச்சாய்
பிடித்துக் கொண்டு
கரைசேர்ந்திடும் துடிப்பில்
உயிர் துடிதுடித்துக் கிடக்கும்

தப்பித்துவிடும் துடிப்பில்
கதவின் இடுக்கில் அகப்பட்டு
நைந்து போன
கரப்பான் பூச்சியின் தவிப்பாய்

Thursday, February 22, 2007

பேரின்ப வெள்ளம்...

பேரின்ப வெள்ளத்தில்
நீந்திக் கிடக்கிறேன்
நினைவுச் சிறகசைத்து
நின் பெயர் இசைத்து

இலக்கு நோக்கி
ஓய்வின்றி
சேரும் இடம் சேர
நீள் வான ஆழியில்
உடலை படகாக்கி
இறகுத்துடுப்பசைத்து
காற்றைக் கிழித்துச் செல்லும்
ககனப்பறவையாய்

Wednesday, February 21, 2007

ஜீவநதி...

வற்றாது சுரக்கும்
அன்பெனும் ஜீவநதி

விழியினில்
பயிற்சியெனும் திரையிட்டும்
மறைக்க இயலவில்லை
மறுக்க இயலவில்லை

ஊற்றுக்கண் தேடியும்
அடைந்து
அடைக்க இயலவில்லை
தடுக்க இயலவில்லை

தானே சுரந்து
தானே ஓயட்டும்

Tuesday, February 20, 2007

போதை மையம்...

போதைக்கான
மறுவாழ்வு மையங்கள்
மறுமலர்ச்சி அடைந்துள்ளன
எங்கெங்கிலும்

அன்பெனும் போதைக்கு
மறுவாழ்வு மையம்
இருக்கிறதா என்ன

வாழ்க்கையின் பாதை...

எங்கே
எப்போது
எப்படி
எந்நொடியில்
யாருடன் இணைந்து செல்லும்
வாழ்க்கையின் பாதை
என்பதை இங்கே யாரறிவார்

அறியயியலா மாயையே
நடத்திச் செல்கிறது
வாழ்க்கையை
வாழ்வில் சுவையின் ரசத்தினை
வாரி வாரி வழங்கியபடி

Monday, February 19, 2007

எங்கெங்கிலும்...

எங்கும் பூக்களின் இன்பநடனம்
எங்கும் வானவில்லின் வர்ணஜாலம்
எங்கும் அசையும் மாமழைமேகம்
எங்கும் வழியும் பேரின்ப கானம்

தேவையுண்டோ இல்லையோ
எங்கெங்கிலும் நீரின்ஸ்பரிசமாய்
கடலிலும் பொழியும் மாமழை

நீள்கின்றது...

நீள்கின்றது நாழிகை
நீ இல்லா பொழுதெல்லாம்
கோடையின் நீள்பகலாய்

உன் அருகாமை
உன்மத்தமாகும் உள்ளம்
உயிரளிக்கும்
வசந்தத்தின் விளைவாய்

உண்மை சுடும்
உன் இல்லாதிருப்பை உணர்த்தி
மீட்சியில்லை இனி

நீ இல்லா பொழுதிலும்
வாழ்ந்துதான் ஆகணும்
உன் நினைவினைச் சுமந்து கொண்டு
உன் அருகாமையை உணர்ந்தபடி
காற்றில் மிதக்கும் விழிகளுடன்

Sunday, February 18, 2007

தொடரும் பயணம்...

உணர்ந்தோ
உணராமலோ
பயணம் தொடர்கிறது
வாழ்க்கையெனும்
பாதையில்
அறியாத வசந்தங்களை
அள்ளி அள்ளி
அளித்த வண்ணம்

உறங்கி விழிக்கையிலும்
உறங்கச் செல்கையிலும்
வாழ்வின் ரசங்களை
உன் நினைவுகளைப் பற்றிக்கொண்டே
உன்னிடம் கதைத்தவண்ணம்

Saturday, February 17, 2007

காலம் வரையும் ஓவியம்...

வண்ணம் புதிதாய்
அளித்தாய்

கானகக் குயில்
கண்டுகொண்டது

வண்ணங்களை
வாரி வாரி தெளித்தாய்

கானகக் குயில்
கானமிசைத்தது

வண்ணங்கள் மறைய
அதிர்ந்த குயில்
கானம் மறந்து
வண்ணம் தேடித்தேடி
அலைந்து ஓய்ந்தது

வானவில்லாய்
ஒளிர்ந்தாய்
கானம் பிறந்தது
இசைத்த கணம் மறைந்தாய்

மஹாமௌனம் நிலவ
மறுபடி ஒளிர்ந்தாய்
வானவில்லாய்
நிறம் பிரியும் வண்ணங்களுடன்
குயிலும் இசைத்தது
இனித்தும்
சோககீதம் சுமந்தும்

வண்ணமும் இசையும்
இணைந்தும் நீங்கியும்
நீங்கியும் இணைந்தும்
இழையும் ஓவியத்தை
வேதனையோ வேட்கையோ அறியா
காலம் வரைந்து கொண்டிருக்கிறது
இன்னும் இன்னும் இயல்பாய்

Friday, February 16, 2007

கல்லும் கரையுமோ...

எதையும் கருத்தில் கொள்ளாது
சிறப்பை மட்டுமே நாடும்
தேர்ந்த சிற்பியாய்
தொடர்ந்து
செதுக்குகிறாய்
தவமிருப்பதாய்

உளியின் பதிவில்
இல்லை வலி
செதுக்க செதுக்க
உதிரிகளும்
சிறுசிறு தூசுகளும்
உதிர்கின்றன தானாகவே
உயர்வடைகிறது சிற்பம்

உளியின் பிரிதல்
உலுக்கி எடுக்கிறது
உன்னதம் தேவையில்லை
உளியின் ஸ்பரிசம் போதும்

Thursday, February 15, 2007

தொடத் தொட...

தொடத் தொட
கரங்கள் நீள
தொலைவில்
மறைகிறாய்

கனவில் வந்து
கனவில் வந்து
கனிவுடன்
நகைக்கிறாய்

கனவோ
நினைவோ
நனவில் கனவோ
கனவில் நினைவோ

உறங்கா நிலையில்
கனவும் கூடுமோ
நினைவில் இனிக்கையில்
உறக்கம் கூடுமோ

Wednesday, February 14, 2007

எழுதி எழுதி...

எழுதி எழுதி
எண்ணங்களிலிருந்து
விடுபட விளைகிறேன்

எழுத எழுத
விழித்துக் கொள்கிறது
இன்னும் இன்னும்
உன்மேலான விருப்பு

யார்...

மனக்கோவிலில்
மறைந்து ஒளிரும்
சிற்பத்தை வடித்தது யார்

உயிரில் கலந்த
உறவாய் உள்ளத்தில்
இணைத்தது யார்

எழுத்தில் பதிய இயலா
எல்லையில்லா அன்பை
எடுத்தளித்தது யார்

எங்கே சென்றாலும்
உள்ளாடும் நினைவை
எங்கே ஒளித்து வைப்பது

அன்பில் விதைக்கப்பட்டது
அன்பாய் விளைந்தது

விதைத்தது யார்
உரமிட்டது யார்
நீரூற்றியது யார்
வேலி கட்டியது யார்
பாதுகாத்தது யார்
உழைத்தது யார்
விளைவித்தது யார்

இயல்பு...

சூரியன்
அன்பால் அரவணைக்கிறது
அதன் இயல்பு
ஏன் அகிலத்தையே ஈர்க்கிறது

தாமரை
தானாய் மலர்கிறது
அதன் இயல்பு
ஏன் கதிரவனிடம் ஈர்ப்பு

வண்டு
தேனை ருசிக்கிறது
அதன் இயல்பு
ஏன் மலரிடம் ஈர்ப்பு

பிறப்பு
இறப்பு

உறவு
பிரிவு

இன்பம்
துன்பம்

அனைத்தும் உலக இயல்பே
இதயம் இன்பத்தால்
ஈர்க்கப்படும்

அன்பால் ஈர்க்கப்படும்
அன்புள்ளம்
அன்பால் ஈர்க்கிறது
அன்பால் ஈர்க்கப்படுகிறது

இது இயல்பா
இது இயல்பில்லையா

பதிலளிக்கவியலா
காரணமற்ற கேள்விகள்
கணக்கற்றவை

நேசித்தலும்
நேசிக்கப்படுதலும்
நிகழ்வது ஏன்

இன்றைய கீதம்...

இன்றைய இசை
இதயம் கிழித்து
இறங்குகிறது

காணாததைக்
கண்டுவிட்ட
படபடப்பு

கண்டதைப்
பெற்று விட்ட
பரவசம்

பெற்றதை
இழக்க விரும்பா
பரிதவிப்பு

உணர்வுகளின் கொந்தளிப்பில்
உடலும் உயிரும்
அதிர்ந்ததிர்ந்து
அடங்குகிறது

இசையின்
இடையேயான
மௌன ஆலாபனை
மோன நிலைக்கு
இட்டுச் செல்கிறது

எங்கும் எங்கும் எங்கும்
எல்லாமே
இன்ப மயம்

உன் நினைவைப் பற்றிக் கொண்டு...

மௌனமாய் அதட்டியும்
உபயோகமில்லை

விழியசைவில் தடுத்தும்
வியர்த்தமே

எந்த போதனையாலும்
பயனில்லை

சற்றும் வெட்கமின்றி
விடமறுக்கிறது

மனதின் ஓசை
ஓயவில்லை

அமைதியான வேளையிலும்
அதிர அதிரத் தீண்டுகிறது

பிறந்த குழந்தையின்
நிணமும், ரணமும்
பூசிய புத்தம்புது மேனியாய்
உயிர்ப்புடன்
கதறிக்கொண்டிருக்கிறது
விழிதிறவாது
உன் நினைவைப்
பற்றிக் கொண்டு

Tuesday, February 13, 2007

மனக்கூடு...

மனக்கூட்டில் உன்னை
மறைவாய்
பாதுகாத்திருந்தேன்

மாலையில் வரும் வழி
மகிழ்வாய்
பார்த்திருந்தேன்

பிரபஞ்ச ரகசியமாய்
பித்துப் பிடித்தலையச் செய்யும்
கூடுவிட்டு கூடுபாயும்
வித்தை கற்றதெங்கே

Monday, February 12, 2007

என்ன பெயர்...

உண்டாயா
ஓய்வெடுத்தாயா
உறங்கினாயா

இடையூறில்லாமல்
பணிசெய்ய இயன்றதா

காயப்படாமல்
வலி ஏற்படுத்தினாலும்
விடுபட்டு வாழும்
விடுதலை வாழ்க்கை
வாழ்கிறாயா

அன்பாய்
அணுசரணையாய்
அனுதினமும்
அகிலத்தில் உன்
அகன்ற காலடி
வரலாறாய் பதியும் வண்ணம்
வாழ்கிறாயா

வீழ்த்தினாலும்
வாழ்வேனென்று
வெற்றிச்சங்கம் அதிர
வீரநடை போடுகிறாயா

ஓயாது எழும்
கேள்விகளுக்கான பதிலாய்
உறவுக்கு நீ
என்ன பெயர் வைத்தாலும் சரி

எந்த கட்டுப்பாடும்
கட்டும் பந்தமும் இல்லை
வரநினைத்தால் வரலாம்
பெறநினைத்தால் பெறலாம்
விடுபட நினைத்தாலும்
விருப்பம் நிறைவேறும்

நேசித்தல் குற்றமா
நேசிக்கப்படுதல் குற்றமா
சமூகத்தின் தவறான பார்வை குற்றமா

உள்நின்றொலித்து அழுத்தமாய்
உச்சரிக்கிறது ஓர் குரல்
உனை நேசிக்கிறேன்

வேண்டும்...

ஓர் பார்வையில்
உன் களைப்பைப் போக்கும்
உயிர் மருந்தாக வேண்டும்

ஓரசைவில்
உன் மனம் சேர்ந்து
வலி ஆற்ற வேண்டும்

பேசாத வார்த்தையில்
பேரின்பம்
அள்ளி வழங்க வேண்டும்

Sunday, February 11, 2007

உன் நினைவில்...

அன்பில் இணைந்த கணம்
அறிய இயலவில்லை

இயல்பாய் நிகழ்ந்ததா
இன்பத் தமிழால் இணைந்ததா
இனிய பண்பால் விளைந்ததா
இணைவில் பிறந்ததா

வந்த வழி தெரியவில்லை
போகும் பாதை புலப்படவில்லை

தேடித்தொலைந்த கணம்
பொய்மானோ
பொன்மழுவோ
கானல்நீரோ
காட்சிப் பிழையோ
நிஜத்தின் நிழலோ
நிழலின் இருப்போ
கனிந்த கனவோ
கனவின் உருவோ

கேள்விகள்
பிறக்கையிலேயே மரிக்கும்

மதியின் மயக்கமோ
மயக்கும் மதியோ
பழிக்கும் விதியோ
விதியின் சதியோ

புரியாத வாழ்க்கையின்
புதிரை விலக்காது
ஏற்றுக்கொண்ட கணம்

எங்கும் சூழ்ந்ததமைதி
பிறந்தது பேரின்ப கானம்

வலியைப் போக்கும்
மாமருந்தாய் நீ
பேரன்புச் சுனையாய்
பேரின்ப நதியாய்

உன் நினைவில் என்றும்
நான் வாழ்ந்திருப்பேன்
உயிர் கசிந்திட
நன்னீர் ஆற்றிலுறையும்
தெள்ளிய நீர்ச்சுவையாய்

Saturday, February 10, 2007

உறங்கா விழிகள்...

நிலவின் நெருக்கம்
நட்சத்திர சிமிட்டல்
நீ இல்லை

மேகம் நீருண்ட களைப்பில்
மயங்கித் தள்ளாடும்

காற்றும் பார்த்து
கடந்து செல்லும்
விழியிலிருந்து தூரமாய்
விலகிச் செல்கிறாய்
வருடங்களாய்

நிலவுறங்க
நீள்வானுறங்க
நீருறங்க
காற்றுறங்க
முகிலுறங்க
முழுஉலகுறங்க

உன் நினைவிலாடும்
உறங்கா விழிகள்

Friday, February 09, 2007

ஜெபிக்கும் காற்று...

அதிகாலை வானம் தன்னில்
அரைத்த பூசுமாவைப்
பூசிக்கொண்டது
ஆரஞ்சு, மஞ்சள், வெளிர் நீலமாய்
வர்ணங்களை
வாரித் தெளித்துக் கொண்டது

மௌனமாய்
இறகசைத்துச் செல்லும் பறவைகூட
உன் பெயரை
இசைத்துச் செல்கிறது

சில்லென்று
தீண்டியது தென்றல்
திரும்பினால் யாரும் இல்லாத
தீக்கணத்தில்
உன் தீண்டலை நினைவுபடுத்த

உழலும் மனதை
இறுகக் கட்டி
உன் பெயரில்
இணைத்து விட்டேன்

மேகங்கள்
உன்நினைவைத்
துரத்திச் செல்ல

வானமெங்கும்
உன் பெயரினை
ஜெபித்துச் செல்கிறது காற்று

Thursday, February 08, 2007

மாற்றி வாசி...

வாசலில் வந்த தென்றல்
வாசமெடுத்து வந்து
வாகாய் பூசிவிட்டது

மூடியவிழிகள்
முகிழ்த்த உணர்வுகள்
காற்றின் அசைவில்
கனிந்த மனம்
காதலில் இசைந்தது

புது ராகம்
புது கானம்
புது மேடை
புதிதாய் பிறக்கும்

ஓர் அசைவில்
வேண்டியதைத் தரும்
வேண்டியதைப் பெறலாம்
அணுகுமுறை மாற்று
மாற்றி யோசி மாற்றி யோசி
மாற்றி வாசி மாற்றி வாசி

Wednesday, February 07, 2007

கிளை-பறவை...

மரம் அங்கேயே
காத்துக் கிடக்கும்

இளைப்பாற
வந்த பறவை
கிளையில் அமர்ந்தது
களைப்பாறியது
பறக்க யத்தனித்தது

காற்று, பறவை, இலை, பூ
எத்தனையோ கிளையில்
அமரும், கடக்கும் என்பதை
அறிந்த கிளைதான்

அந்தப்பறவையின்
அசைவில்
பயணம் தொடரும்
அசைவில்
அதிர்ந்து கிடந்தது கிளை

ஆஆவென
ஆர்ப்பரிக்கும் கிளை
காற்றின் வீச்சில்
நிறுத்த இயலுமோ
பறவையின் பயணத்தை

கிளை என்ன செய்யும்
அந்தப் பறவைக்கும்
கிளைக்குமான உறவு என்ன
பறவையை எப்படி
நிறுத்த இயலும் மரக்கிளையால்

மரம் அங்கேயே
காத்துக் கிடக்கும்

தென்றலாய்...

மூச்சடைக்க
வியர்த்துக் கிடந்த பொழுது
சாத்தியிருந்த சாளரம்
சற்றே திறந்து
தென்றலாய் உள்நுழைந்தாய்

ஒரு பார்வையில்
உயிர்ப் பூவைப் பறித்தெடுத்தாய்
தவித்துக் கிடப்பதறிந்து
தண்மையாய் சாமரம் வீசினாய்

காற்றிற்கிசைந்த
பூவின் அசைவினை
நீ அறியாய்
என்ன தவம் செய்தேனோ
அறிந்து கொண்டேன் நான்

அரிச்சுவடி...

புதுகானம் பிறந்தது
புதுத்தேன் சொரிந்தது

அன்பெனும் மாமருந்து
அனைத்தையும்
மாற்றும்

புதிதாய்
கற்றுக் கொடுத்தாய்
வலியை மறக்க
வலிந்து சிரிக்க
இயல்பாகிறது சிரிப்பு
அரிச்சுவடி
கற்பித்தது நீ

Tuesday, February 06, 2007

தள்ளாடும் மனது...

தள்ளாடும் மனதைத்
தள்ளி நின்று பார்த்தேன்

உன் நினைவைப்
பற்றிக் கொண்டு
அடம் பிடிக்க்கிறது
பால்குடி மறக்க
அழும் குழந்தையாய்

Monday, February 05, 2007

உயிர்வலி...

உலகின் சுழற்சியில்
எதையும்
எதிர்கொள்ளும்
மனத்திண்மையுள்ளது

உன்னை இழந்திடும்
உயிர்வலியைத் தவிர

உள்ளிருந்தோர் குரல்
உன்னை
உச்சரித்துக் கொண்டிருப்பதால்
உயிர்ப்புடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

நீ...

எங்கே சென்றாய் நீ
தேடிக் களைக்கின்றன விழிகள்

அறிவேன்
எப்போதும்
என்னுடன் இருக்கிறாய்
அறிந்தும்
தொடரும் தேடல்

புதுராகமெடுத்து
கானமிசைத்துச் செல்லும்
வானம்பாடி நீ
செல்லும் திசை தேடி
விரிகின்றன சிறகுகள்

இணைய இயலா ககனத்தில்
வெவ்வேறு திசைகளில்
விரும்பிய தேடலில்
பயணம் தொடர்கிறது

உன்மத்தம் விடுத்து
உன்கூடு சேர்வாய் நீ

களைத்தும்
என்கூடு சேர்வேனா
காணவியலா சோர்வில்
ககனத்தில் மாள்வேனா

அன்புப் பிடி...

ஆணை எங்கிருந்தோ வரும்
அன்பாய்
ஆதிநுட்ப ஆங்காரமாய்
அதிரடியாய்
மென்மையாய்
மௌனமாய்
அழிக்கவியலா
அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணம்

அப்படியே நடக்கச் சொல்லும்
அன்புப்பிடி

விலகிட இயலா விருப்புடன்
விரும்பிய வண்ணம்
வண்ணங்களை வாரிஇறைத்தபடி
வழிநடத்திச் செல்லும்
வாழ்க்கை

Sunday, February 04, 2007

கடந்த பாதை...

கடந்து வந்த பாதை
கடந்து திரும்பும்
அதே பயணம்
சாத்தியமா

நதியின் பிரவாகம் திரும்பி
ஊற்றுக்கண் சேரவியலாது
சென்று சேரும் இடம்
நதியின் ஓட்டம் மீறியது

ஓடி ஓடிக் களைத்து
சேரும் இடம்
விதியின் கைகளில்

நதி ஓடியே ஆக வேண்டும்
தன்னிச்சையுடனும்
தன்னிச்சை கடந்தும்
இயற்கையின் அழகையும்
இயல்பாய் நிகழும் விஷயங்களையும்
அணைத்தெடுத்துக் கொண்டு

Saturday, February 03, 2007

அன்புப் பிரவாகம்...

இயந்திர உலகில்
இசைவாய் உன்
அயர்வைப் போக்கிடவே
அனுதினமும் விளைகிறேன்

சென்ற இடம் அறியாது
சிந்தை கலங்கிட
உன்னைத் தேடுகையில்
கட்டுக்குள்
இருக்க விரும்பும் மனம்
கட்டுகளை உடைத்தெறிந்து
உனைத்தேடி வருவதை
நீ அறிந்திடாய் என்றும்

அன்புப் பிரவாகம்
உன்னை அழித்துவிடாது
காத்திடவே துடிக்கிறேன்
என்னையும் நீ காத்திடுவாய்
எனும் நம்பிக்கையே
இன்னும் வாழச் சொல்லி
உயிர்ப்பிக்கிறது

தேடித் தேடி...

அய்ம்புலன்களும்
கட்டப்பட்ட நிலையில்
அன்புப் பேரொளியெனும்
பிரகாசம் நாடி
வீழ்ந்து விடத்துடிக்கும்
விட்டில் பூச்சியாய்
விரைகிறது மாறிமாறி பரிமாணம்

ஒளி ஓளிரும்போதும்
ஒளியின் சுடர்விலகும்போதும்
அதைத் தேடித் தேடியே
களைத்துக் கிடக்கும்

ஒளிச்சுடர் என்றும் அறியாது
ஒளியையே உண்டு
விழுங்கி விடத் துடிக்கும்
விட்டிலின் வேட்கையினை

அலைபாய்கிறது...

இரும்பாய் இறுகிக் கிடந்த
இதயத்தை
இயல்பாய் ஒரு சிறு காந்தமென
இழுத்துச் சேர்த்துக் கொண்டாய்

அகங்காரம்
அழிய அழிய
இன்னும் இன்னுமென்று
இங்கும் அங்கும்
அலைபாய்கிறது

எவ்வித திசையிலும்
மீள்தல்
சாத்தியமில்லா நிலையில்
இன்னுயிரை
அழித்துக் கொண்டபின்பே
இயல்புக்கு
மீள இயலும்

எங்கிருந்தோ ஒரு குரல்...

எங்கிருந்தோ மௌனமாய்
ஒருகுரல்
இசைத்துக்கொண்டே இருக்கிறது

வேறு இலக்கேதுமின்றி
அதைத் தேடியே
அலைந்து கொண்டிருக்கிறேன்

இங்கே
அங்கே
எங்கேயென்று
தேடிச் செல்லச் செல்ல

வேறு வேறு கானங்களை
இசைத்த வண்ணம்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எங்கிருந்தோ அக்குரல்

உள்நின்றுழலும்
மனதைக் கட்ட இயலாது
உடன்பட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரை அழித்துக் கொள்ளும்
வேட்கையோடு

உன் மீதான அன்பு...

உன் மீதான அன்பை
எழுதி எழுதி
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
நீரில் கரைந்திடும்
சர்க்கரையாகிடுமென்று

எழுத எழுத
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
வனவளங்களை அழித்திடும்
காட்டுத்தீயாய்
உனைத் தீண்டிடும் இச்சையை
விதவித வர்ணங்களில் தீட்டியபடி
ஒளிர்ந்துகொண்டு

Friday, February 02, 2007

உன் நினைவு...

பறவையின் விழியை மட்டுமே
பார்த்த பார்த்தனின் இலக்காய்
தவம் செய்வதாய் குறிவைத்து
தொலைவில் செல்லச் செல்ல
அருகில் அருகில் ஈர்க்கிறாய்

இருளை அழிக்கும் ஒளிச்சுடராய்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்
ஒளியின் தீடசண்யத்தில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
உருகும் மெழுகாய்

அணைந்த திரி பரப்ப
எழும்பும் புகையாய்
மேலெலும்பி
சுழன்று கொண்டிருக்கிறது
உன் நினைவு

Thursday, February 01, 2007

கள்வெறி கொண்டு...

வடைக்கான மாவிடுகையில் தெறித்த
சுடும் எண்ணெய்
சுட்டவலியைப்
போக்கிடும் அருமருந்தாய்

இசைக்கும் வார்த்தைகளுக்கு
இடையேயான மௌனம்
வளர்த்தெடுக்கும்
மெல்லிய அன்பை

ரணம் மறைத்துக் கிடந்த
காயத்தின் மேல்பொறுக்கு
காய்ந்து விழ விழ
வடு மறைய மறைய

கள்வெறி கொண்டு கூத்திடும்
ஆர்ப்பரிக்கும் உள்ளம்
கனிந்த அமைதியில் திளைக்கும்
காயம் மறந்து காதலில் நனைந்து