Monday, April 16, 2007

இலக்கியம் புதிதாய்...

உனக்கான ஆறுதலாகவே
உனை நெருங்கினேன்
சவலைக் குழந்தையை
சரிசெய்ய அரவணைத்து
சமாதானம் செய்வதாய்

விதையாய் விழுந்து
விஸ்வரூபமெடுத்தாய்
சாதுர்யமாய் உள்ளம்
பறித்தெடுத்தாய்
பந்தாடுகிறாய்

சதுரங்கக் காயினை
சரியாக நகர்த்தினாய்
வெற்றியை வெளிக்காட்டாது
பொதுவில் வைத்தாய்
தோற்றுக் கிடக்கிறேன்

வெற்றி தோல்வியின்றி
இருவரும் வெல்லும்
எடுத்தும் கொடுக்கும்
ஒரே போட்டியினை
வேண்டிநிற்கிறாய்

எண்ணம் அழிய
உணர்வின் நெகிழ்வில்
உன்னை விடுத்து
உலகு வேறில்லையென
மீளவியலா அளவில்
மீட்சியின்றி கிடக்கிறேன்

இலக்கியம் படைத்திரா
இனிய உறவிது
இன்ப வேட்கையிது
இருவரும் இசைந்திணங்க
படைக்கச் செய்கிறாய்
இலக்கணம் மீறும்
இலக்கியம் புதிதாய்

Thursday, April 05, 2007

கருத்தழிந்து போகிறேன்...

நினைவால் நிதம் தீண்டுகிறாய்
நித்தம் ஒரு கவிதை வேண்டுகிறாய்
உயிர்ப்பூவெடுத்து
வார்த்தைச் சரம் தொடுத்தளிக்கிறேன்
உன் மகிழ்வை வேண்டி

நிதம் அன்பால் நெருங்குகிறாய்
நித்தம் புத்தம் புதுநாளை பரிசளிக்கிறாய்
உயிரையளித்து உயிர் மீட்டெடுக்கிறாய்
என் மகிழ்வை நாடி

கண்டும் காணாமல்
மறைந்து ஆட்டம் காட்டுகிறாய்
காணாகாட்சியில் தொலைந்து
கருத்தழிந்து போகிறேன்

விழிகள் பொழியும் நீர்...

மேகம் கடந்து வந்தாய்
வேகமாய் தழுவிட விரைந்து

சோகம் போக்கி உடன்
சுகபோக விருந்தளித்தாய்

விழிகள் பொழியும் நீரினை
இதழால் துடைத்தெறிந்தாய்